Total Pageviews

Saturday, 17 August 2013

வலி



கீழ்வீட்டு கோமதி , தெருவில் விற்றுக்கொண்டு போகும் திண்பண்டங்கள், மலிவு விலை அழகு சாதனங்கள், ஹேர் கிளிப்புகள் முதல் பூ வரை எல்லாவற்றுக்கும் மனதார செலவழிப்பாள். புத்தகங்கள் மட்டும் ஓசியில்தான்.
எனக்கோ புத்தகங்களை இரவல்  தரவே பிடிக்காது.!புத்தகங்கள் எனக்கு பொன் போல கண் போல! வாசுகி என்ற என் பெயரை வாசகி என்று மாற்றிக்கொள்ளும் எண்ணம் மனதுக்குள் வந்து வந்து போகும்.

பெற்ற மகளைக் கட்டி கொடுத்து புக்ககம் அனுப்பி வைக்கும் தாயின் மன நிலை புத்தகங்களை இரவல் தரும் வேளையில் எனக்கு ஏற்படும், 

பார்த்து பத்திரம் என்று பக்கத்துக்கு  ஒரு முறை சொல்லித்தான் கொடுப்பேன்.
அப்படியிருந்தும் ஓரங்கள் மடங்கி பக்கங்கள் கிழிந்து நீரில் நனைந்து பெருமழையில் மாட்டி கொண்ட வெள்ளைப்புறா போல இருந்தது புத்தகம்.

சர சரவென கீழே இறங்கினேன் . புத்தகத்தை எடுத்துகொண்டு, “ கோமதி என்ன இது… புத்தகத்தை பார்த்தாயா என்ன நாசம் பண்ணியிருக்கே… பத்திரிக்கை தர்மம்னு ஒண்ணு இருக்கு ஆனா தர்ம பத்திரிக்கைன்னு ஒண்ணு கூட இல்ல தெரியுமா?” என்றேன் ஆத்திரம் பொங்க…
“அக்கா கொளந்தைங்கை இருக்கிற வீடு அப்படித்தான் இருக்கும்… என்றாள் ஈஸியாக…!
விக்கித்து போய் நின்றேன். இன்னும் பிள்ளை வலி என்றால் என்ன என்று தெரியாத நான்!

(26-06-2013 குமுதம் இதழில் வெளிவந்தது)
 

யாரந்த நாலு பேர்....!


உங்களில் யார் அந்த நாலு பேர்...?

என் அண்ணனா....

உன் தம்பியா...

அடுத்த வீட்டு அன்பழகனா...

எதிர் வீட்டு ஏகாம்பரமா...

வரப்பு தகராறில்

முச்சந்தியில் முகத்தில் உமிழ்ந்து கொண்ட

மேலத்தெரு மொக்க ராசுவா...

காதலித்து கைவிட்ட

முத்துலட்சுமியின் புருஷன் முருகேசனா...

பார்த்து கொண்டாலும் 

முகத்தை முறித்து போகும்

தங்கை காமாட்சி புருஷன் பொன்னுச்சாமியா..

சென்னை பட்டினத்தை

சொந்த ஊராக்கி கொண்ட

சின்னத்தம்பி பால் பாண்டியா...

தன் பிணத்தை 

தானே சுமக்கும் அவல நிலை

என்றைக்கும் வராது..

செத்த பிறகு நான் சொல்லும் நன்றி 

உங்களுக்கு வந்து சேராது...

எனவே இப்போதே சொல்ல வேண்டும் 

நன்றி....

யாரந்த நாலு பேர்....!



(17-08-2013 இன்றைய தினமலர்- பெண்கள் மலரில் வெளியானது)


சொன்னது நீதானா?



 
“ஹேய் மஞ்சு... நேத்து மட்டும் என்ன செலவு தெரியுமா? கஸானா மல்லி மொக்கு சங்கிலியிலேயிருந்து கடைத்தெரு மல்லிகைப்பூ வரைக்கும் ஆன செலவு லட்சத்து அறுபதாயிரம் , நகையை வாங்கி போட்டுக்கிற வரைக்கும்” நீங்க என்ன சொன்னாலும் கேக்கிறேன்னு...ன்னு சொல்லிட்டு இப்ப என் அண்ணன் மக நிச்சயதார்த்துக்கு வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறியே... நியாயமா மஞ்சு” என்று கேட்டுக் கொண்டு இருந்தான் சந்துரு.

டிரஸ்ஸிங் டேபிள் முன் உட்கார்ந்து கொண்டு மல்லி மொக்கு சங்கிலியை கழுத்தில் தவழ விட்டு அழகு பார்த்து கொண்டிருந்த மஞ்சு காதல் ததும்பிய கண்களை ஒரு தரம் மூடி திறந்து, லிப் க்ளாஸ் பொருந்திய ஆரஞ்சு உதடுகளைப் லேசாக பிரித்து கூலாக சொன்னாள்...

  நீங்க என்ன சொன்னாலும் கேக்கிறேன்’ன்னுதானே சொன்னேன்...?”

(26-06-2013 குமுதம் இதழில் வெளிவந்தது)

முதல் பக்கம்

என் புதிய பக்கங்களுக்கு உங்களை வரவேற்கிறேன்.....! இதில் நான் எழுதி பத்திரிக்கைகளில் வெளிவந்த படைப்புகளும், என் பொதுவான படைப்புகளும் இடம் பெறும்.